Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Dienstag, 26. Januar 2016

தை மாசி பங்குனி விஷேட தினங்கள்


2016 விசேட தினங்கள்


ஆலய தரிசனம்

ஆலய தரிசன விதி 
 சைவசமயத்தவர் ஒவ்வொருவரும் தினந்தோறும்  திருகோவிலுக்குச் சென்று   பய பக்தியுடன் சுவாமி தரிசனம்  செய்தல் வேண்டும் ஒவொரு நாளும் சுவாமி தரிசனம் செய்ய இயலாதார் சோமவாரம் , மங்களவாரம், சுக்கிரவாரம் , பிரதோஷம் , பௌர்ணமி , அமாவாசை    , திருவாதிரை , கார்த்திகை , மாசப்பிறப்பு , சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் ,சிவராத்திரி , நவராத்திரி , விநாயக சதூர்த்தி , விநாயக சஷ்டி , கந்த சஷ்டி  முதலிய புண்ணிய காலங்களிலேனும் தவறாது ஆலய தரிசனம் செய்தல் வேண்டும் . 

சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் திருக்கோவிலுக்கு சமிபத்திலே  உள்ள புண்ணிய தீர்த்தத்தில்   ஸ்நானம் செய்து தோய்த்து உலர்த்திய வஸ்திரம் தரித்து நித்திய  கருமானுஸ்டானம்   முடித்துக் கொண்டு பரிசுத்தமாக கோவிலுக்கு போக  வேண்டும் .

போகும் போது ஒரு பாத்திரத்திலே தேங்காய் , பழம் , பாக்கு , வெற்றிலை , கற்பூரம் ,  புஷ்பம் , முதலியன கொண்டு போக  வேண்டும் 

ஆலயத்துக்கு சமீபித்ததும்  ஸ்தூல லிங்கமாகிய திருக்கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையும் சிரசிலே குவித்துக் கடவுளை மனதிலே  தியானித்துக் கொண்டே உள்ளே பிரவேசித்து, பத்திர லிங்கமாகிய பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பன்ன வேண்டும் 

ஆண் பிள்ளைகள்  அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும் . திரையங்க நமஸ்காரம் இவ்விருவருக்கும் போது. 
  •  அஷ்டாங்க நமஸ்காரமாவது : தலை ,கையிரண்டு , செவியிரண்டு , மோவாய் ,                   புயங்களிரண்டு  என்னும் எட்டு அங்கங்களும் நிலத்திலே தோயும் படி வணங்குதல் 
  •  பஞ்சாங்க நமஸ்காரமாவது தலை , கையிரண்டு , முழங்கால் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே தோயும் படி வணங்குதல் 
  •  திரியாங்க நமஸ்காரமாவது சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்
நமஸ்காரம் மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும் , ஒன்பது தரமாயினும் , பன்னீரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும்.  ஒரு தரம் இரு தரம் பண்ணல் கூடாது. நமஸ்காரம் பண்ணும் போது கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் சிரசை வைத்து நமஸ்காரம் செய்தல் வேண்டும். நமஸ்காரம் செய்து முடிந்தவுடன் உடனே எழுந்து பிரதட்சினம் பண்ணல் வேண்டும் .

பிரதட்சினம் முடித்தவுடன் சந்நிதானத்தில் மீண்டும் நமஸ்காரம் செய்து உள்ளே போய் கடவுளை தரிசித்து சுத்தமான சித்தத்துடன் பக்தி ரசம் மிகுந்த தேவாரங்களை இயன்ற மட்டும் இராகத்துடன்  பாடி துதி செய்தல் வேண்டும் . பின் அர்ச்சகரை கொண்டு பத்திர புஷ்பங்களால்  சுவாமிக்கு அர்ச்சனை செய்வித்து  தேங்காய், பாக்கு, பழம் முதலியவற்றை நிவேதித்து  கற்பூர ஆரத்தி காட்டுவித்து  அர்ச்சகருக்கு தம்மால் இயன்ற தட்சணை குடுத்து அவரிடம் இருந்து விபுதி பிரசாதங்கள் பெற்று கொள்ளல் வேண்டும்

பின் சுவாமியை தரிசித்து கொண்டு புறம்காட்டது பலிபீடத்துக்கு இப்பால் வந்து நமஸ்காரம் செய்து வடக்கு முகமாக  இருந்து சுவாமியை மனதிலே தியானித்து  பின் எழுந்து விட்டிற்கு  போக வேண்டும்

தைப்பூசம்

தைப்பூச  திருநாளும் அதன் சிறப்பும் 

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.
தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள்.
தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.பூரணை தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க ”தைப்பூச திருநாள்” அமைகின்றது. இச் சிறப்பு மிக்க இத்தினம் இவ் வருடம்  24.01.2016 அன்று இலங்கை, இந்தியவிலும்; 23.01.2016 அன்று வட அமெரிக்க நாடுகளிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.
தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம். சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.
உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் செயற்பாடுகளுக்கும் மறைவிற்கும் இயற்கையே காரணியாக அமைகின்றது. இயற்கையை மீறி எதுவும் செயற்ப்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்படமுடியாது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இயற்கையே விதியாக அமைகின்றது. இதை வலியுறுத்துவதும் இத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும்.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.

அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.

சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத் தைப்பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும். முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது. சிவனின் அருளினால் தோன்றிய முருகன் அன்னையின் சக்தியையும் பெற்று சிவசக்தியின் பேரருள் மிக்கவராக இத் தைப்பூச நாளில் திகழ்வதால் முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.




முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
 

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப, துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ, வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத் தைப்பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது.




"தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.

இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப் படைத்து, காத்து, அருளி, அழித்து, மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.




இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும். எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச் செய்யும்.



உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்திக்குமரன் பேரருளை நாடி வழிபடுவோம்...

"Ein Hindu-Tempel in der Bauernscheune"

Liebe Besucher,
hier finden Sie einen interessanten Bericht über den Sri Sivasakthi Kumaran Tempel aus dem "Achimer Kurier" vom 29.05.2015.
Viel Spaß beim Lesen!

http://www.weser-kurier.de/region/achimer-kurier_artikel,-Ein-Hindu-Tempel-in-der-Bauernscheune-_arid,1133572.html


Sri Sivasakthi Kumaran



Tempel Genehmigung und Bauplan