Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Samstag, 26. März 2016

துர்முகி வருடப்பிறப்பு (13.04.2016)

                     ஸ்ரீ சிவசக்திக் குமரன் ஆலயம் பிறேமன்
                 துர்முகி வருடப்பிறப்பு  (சித்திரை புத்தாண்டு )


சித்திரை முதலாம் நாள்  (13.04.2016) புதன்கிழமை ஐரோப்பிய நேரப்படி 15:06 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்திலிருந்து மேஷராசிக்கு சூரியபகவான் பிரவேசிக்கின்ற இந்த காலநேரமே சித்திரைப் புத்தாண்டாக  அமைகின்றது .
                இந்த புனித நாளில் விசுபுண்ணியகாலம் காலை 10:06 தொடக்கம் மாலை 19:06 வரையிலான காலப்பகுதிக்குள் அமைகின்றது. தோஷங்கள் நீங்கி நட்சத்திர, ராசிகளின் நற்பலன்களை பெறுவதற்காக  மருத்துநீராடி அன்று வெண்ணிற, அல்லது பச்சை நிற ஆடை அணிந்து ஆலயம் சென்று வழிபடுதல் வேண்டும்.

ஆலயகுரு: பிரம்மஸ்ரீ  ப. ஜெகதீஸ்வரசர்மா

Freitag, 11. März 2016

பங்குனி உத்தரம் 23.03.2016 புதன்கிழமை

பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படுகிறது இது  பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12 ம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம், எனவே 12 கை வேலவனுக்கு சிறப்பான தினமாக இது கொண்டாடப்படுகிறது.


       அசுரனை வீழ்த்திய நாள்

பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.
அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.
                              எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.
                                             தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.
சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு இந்த பங்குனி உத்தரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான் மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.
                    அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனைப் படைப்பதாக கூறினார்.
                                                                                                                 பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார்.  இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.
                                           இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம்.

" விரதம் "

விரதம் என்றால், ‘ஒன்றையே எண்ணி மனம் லயித்து இருத்தல்’ என்று பொருளாகும்.  அதாவது செயல்படுத்த வேண்டிய விஷயத்தை உறுதியாக மனதில் தீர்மானித்து கொள்வதே விரதமாகும். அந்த மன உறுதிக்கு இறை அருள் தேவை. அதுதான் விரதத்தின் உயரிய நோக்கமாகும்.
                                    விரதம் நம் மனதை மட்டுமல்ல, உடலையும், பக்குவப் படுத்துகிறது. சரியான உணவு பழக்கமே ஆரோக்கியமாக வாழ வைக்கும். உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும், அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பசிக்கும் முன்பு சாப்பிட்டால் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. வயிறு காலியாக இருந்தால் மட்டுமே ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.
                                         அது மட்டுமல்ல வயிறு காலியாக இருக்கும் போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எப்போதும் வயிறு நிரம்பி இருந்தால் ஜீரண சக்தி பாதிக்கப்படும். விஞ்ஞானப் பூர்வமான இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள் பண்டிகைகள் மற்றும் வேண்டுதல்கள் அடிப்படையில் விரத முறையை உருவாக்கினார்கள்.
                                              அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பித்ரு வழிபாடு என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ப விரத நாட்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பொதுவான விதிகளுடன், எந்த கடவுளுக்கான விரதமோ அந்த கடவுளுக்கு ஏற்ப விரத நாட்களும், வழிமுறைகளும் உள்ளன.ஒவ்வொரு விரதத்துக்கும் எத்தகைய உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
           முழுப் பட்டினி கிடந்து விரதம் இருப்பது ஒரு வகை. பழ ஆகாரம் (பலகாரம் அல்ல) மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது மற்றொரு வகையாகும்.   பழ ஆகாரம் என்பது பழ வகைகள் மட்டும் கொஞ்சமாக சாப்பிடுவதாகும். பழ ஆகாரம் அதிக வலு இல்லாதது. பழ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தால் வயிற்றில் உள்ள பழைய கழிவுகள் அனைத்தும் வெளியில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விரதத்தை நாம் ஆன்மிகத்தோடு இணைக்கும் போது, அது பக்தியின் படி நிலைகளில் முதன்மையானதாக மாறுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இறைவழிபாடுகளில் நாம் கொண்டுள்ள பக்தியை முழுமை அடையச் செய்வதே இத்தகைய விரதம்தான்.
                                                          அதிலும் விரதம் இருக்கும் நாட்களில் மனதை ஒரு முகப்படுத்தி தியானத்தை கடைபிடித்தால், அது முக்திப் பாதைக்கு நன்மை முன்னேற்றும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே விரதம் என்பது புனிதமானது. விரதங்களினால் நம் ஆன்மா உறுதித் தன்மையைப் பெறுகிறது.
                   விரதம் மூலம் நாம் வயிற்றுக்கும், இரைப்பைக்கும் ஓய்வு கொடுப்பதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சிப் பெறும். அதோடு விரத தினத்தன்று ஆலயத்துக்கு சென்று இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் முழு பலனும் கிடைக்கும்.
                                      விரதம் இருக்கும் தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து, சுத்தமான ஆடை அணிந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அருகில் வைத்து கொண்டு எந்த கடவுளை நோக்கி, என்ன விரதம் இருக்கப் போகிறோம் என்பதை உச்சரித்து சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
                                           இறுதியில் கருவறை முன்பு நின்று, ‘உன்னை சரண் அடைய இன்று இந்த விரதம் இருக்கிறேன். என் குறைகளை தீர்க்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி விரதம் மேற்கொள்ள வேண்டும். இறை நாமத்தை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். மாலை, உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் போது மீண்டும் ஆலயத்துக்கு சென்று, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். அப்போது இறைவனுக்கு உகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். அந்த தெய்வத்துக்கு பிடித்த நைவேத்தியத்தை படைக்க வேண்டும். இப்படி ஆன்மீக உணர்வுடன் இருக்கும் விரதம் வெற்றி பெறுகிறது.
                                                    பொதுவாக சாப்பிடும் 6 மணி நேரத்துக்குள் மீண்டும் சாப்பிட்டால் பழைய உணவு கொழுப்பு சக்தி ஆற்றலாக மாறாமல் கெட்ட கொழுப்பாக மாறி தேங்கி விடும். வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் கொழுப்பு தேங்கும் பிரச்சினையே வராது. முகம் பளிச்சென பிரகாசமாக மாறும். விரதத்தால் மனதின் செயல் குறைந்து தூய்மை பெறும். மனம் தூய்மையானால் தானாகவே ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். இதற்கு விரதம் இருக்கும் மன வைராக்கியம் தேவை.
                                                                     அதற்காக முழு பட்டினி கிடக்க வேண்டியதில்லை. முழு பட்டினியானது நீர் வறட்சியை ஏற்படுத்தி விடும். சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதை தவிர்க்க விரதத்தின் இடையிடையே தண்ணீர் அல்லது பழரசம் அருந்தலாம். விரதம் இருக்கும் போது இறை சிந்தனையுடனே இருங்கள். பேசுவதை குறையுங்கள். இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். மனப்பூர்வமாக விரதம் இருங்கள். நிச்சயமாக இறைவன் உங்கள் வாழ்வில் மங்களத்தை ஏற்படுத்துவார்.

Donnerstag, 3. März 2016

மங்கலம் தரும் மகா சிவராத்திரி விரதம் - 07.03.2016

ராத்திரி என்ற பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும்.

இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும். அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த `ராத்திரி' மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும்.

நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை. உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது.

உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழு முதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமா தேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும்.

இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கொள்ளப்படுகின்றது.

சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவ ராத்திரி மகிமை கூறப்படுகின்றது. சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித் தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது.

அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது. மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச் சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய  விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவதையும் குறிக்கும்.

நான்காவதாக செய்ய வேண்டியது தீபம் ஏற்றுதல், இல்வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து முழுதிருப்தி அடைய முடியும்'. சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும்.

துவைத்த  ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைச்சு மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்துச் சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவசிந்தனையோட கோவிலுக்குப் போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை.

இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி 14 நாழிகையான லிங்கோத் பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

வெண்பொங்கல், வடை, அன்னம், தோசை போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும். சிவனுக்கு மிகவும் விருப்பமானது வில்வம், விலக்க வேண்டியது தாழம்பூ. மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.