Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Freitag, 11. März 2016

" விரதம் "

விரதம் என்றால், ‘ஒன்றையே எண்ணி மனம் லயித்து இருத்தல்’ என்று பொருளாகும்.  அதாவது செயல்படுத்த வேண்டிய விஷயத்தை உறுதியாக மனதில் தீர்மானித்து கொள்வதே விரதமாகும். அந்த மன உறுதிக்கு இறை அருள் தேவை. அதுதான் விரதத்தின் உயரிய நோக்கமாகும்.
                                    விரதம் நம் மனதை மட்டுமல்ல, உடலையும், பக்குவப் படுத்துகிறது. சரியான உணவு பழக்கமே ஆரோக்கியமாக வாழ வைக்கும். உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும், அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பசிக்கும் முன்பு சாப்பிட்டால் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. வயிறு காலியாக இருந்தால் மட்டுமே ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.
                                         அது மட்டுமல்ல வயிறு காலியாக இருக்கும் போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எப்போதும் வயிறு நிரம்பி இருந்தால் ஜீரண சக்தி பாதிக்கப்படும். விஞ்ஞானப் பூர்வமான இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள் பண்டிகைகள் மற்றும் வேண்டுதல்கள் அடிப்படையில் விரத முறையை உருவாக்கினார்கள்.
                                              அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பித்ரு வழிபாடு என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ப விரத நாட்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பொதுவான விதிகளுடன், எந்த கடவுளுக்கான விரதமோ அந்த கடவுளுக்கு ஏற்ப விரத நாட்களும், வழிமுறைகளும் உள்ளன.ஒவ்வொரு விரதத்துக்கும் எத்தகைய உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
           முழுப் பட்டினி கிடந்து விரதம் இருப்பது ஒரு வகை. பழ ஆகாரம் (பலகாரம் அல்ல) மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது மற்றொரு வகையாகும்.   பழ ஆகாரம் என்பது பழ வகைகள் மட்டும் கொஞ்சமாக சாப்பிடுவதாகும். பழ ஆகாரம் அதிக வலு இல்லாதது. பழ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தால் வயிற்றில் உள்ள பழைய கழிவுகள் அனைத்தும் வெளியில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விரதத்தை நாம் ஆன்மிகத்தோடு இணைக்கும் போது, அது பக்தியின் படி நிலைகளில் முதன்மையானதாக மாறுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இறைவழிபாடுகளில் நாம் கொண்டுள்ள பக்தியை முழுமை அடையச் செய்வதே இத்தகைய விரதம்தான்.
                                                          அதிலும் விரதம் இருக்கும் நாட்களில் மனதை ஒரு முகப்படுத்தி தியானத்தை கடைபிடித்தால், அது முக்திப் பாதைக்கு நன்மை முன்னேற்றும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே விரதம் என்பது புனிதமானது. விரதங்களினால் நம் ஆன்மா உறுதித் தன்மையைப் பெறுகிறது.
                   விரதம் மூலம் நாம் வயிற்றுக்கும், இரைப்பைக்கும் ஓய்வு கொடுப்பதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சிப் பெறும். அதோடு விரத தினத்தன்று ஆலயத்துக்கு சென்று இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் முழு பலனும் கிடைக்கும்.
                                      விரதம் இருக்கும் தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து, சுத்தமான ஆடை அணிந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அருகில் வைத்து கொண்டு எந்த கடவுளை நோக்கி, என்ன விரதம் இருக்கப் போகிறோம் என்பதை உச்சரித்து சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
                                           இறுதியில் கருவறை முன்பு நின்று, ‘உன்னை சரண் அடைய இன்று இந்த விரதம் இருக்கிறேன். என் குறைகளை தீர்க்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி விரதம் மேற்கொள்ள வேண்டும். இறை நாமத்தை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். மாலை, உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் போது மீண்டும் ஆலயத்துக்கு சென்று, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். அப்போது இறைவனுக்கு உகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். அந்த தெய்வத்துக்கு பிடித்த நைவேத்தியத்தை படைக்க வேண்டும். இப்படி ஆன்மீக உணர்வுடன் இருக்கும் விரதம் வெற்றி பெறுகிறது.
                                                    பொதுவாக சாப்பிடும் 6 மணி நேரத்துக்குள் மீண்டும் சாப்பிட்டால் பழைய உணவு கொழுப்பு சக்தி ஆற்றலாக மாறாமல் கெட்ட கொழுப்பாக மாறி தேங்கி விடும். வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் கொழுப்பு தேங்கும் பிரச்சினையே வராது. முகம் பளிச்சென பிரகாசமாக மாறும். விரதத்தால் மனதின் செயல் குறைந்து தூய்மை பெறும். மனம் தூய்மையானால் தானாகவே ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். இதற்கு விரதம் இருக்கும் மன வைராக்கியம் தேவை.
                                                                     அதற்காக முழு பட்டினி கிடக்க வேண்டியதில்லை. முழு பட்டினியானது நீர் வறட்சியை ஏற்படுத்தி விடும். சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதை தவிர்க்க விரதத்தின் இடையிடையே தண்ணீர் அல்லது பழரசம் அருந்தலாம். விரதம் இருக்கும் போது இறை சிந்தனையுடனே இருங்கள். பேசுவதை குறையுங்கள். இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். மனப்பூர்வமாக விரதம் இருங்கள். நிச்சயமாக இறைவன் உங்கள் வாழ்வில் மங்களத்தை ஏற்படுத்துவார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen