Sri Sivasakthi Kumaran Bremen

Sri Sivasakthi Kumaran Bremen

Sonntag, 7. Februar 2016

மாசி மகம்

மாசி மகம் விரத கதை Rate this item1 2 3 4 5 (0 votes)   மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தோடு கூடிய புண்ணிய காலம் மாசி மகம் ஆகும். ஈசனுடன் ஏற்பட்ட ஊடல் காரணமாக பார்வதி தேவி பூமியில் பிறக்கும்படி நேர்ந்தது. காளிந்தி நதியில் இருந்த தாமரைப் பூ ஒன்றில் வலம்புரிச் சங்கு வடிவமாய் இருந்தாள் அம்பிகை. அப்போது தக்கன் தன் மனைவி வேதவல்லியோடு அங்கு நீராட வந்தான். அவனது பார்வையில் வலம்புரிச் சங்கு பட்டது. அதனை எடுத்தபோது, அது அழகிய பெண் குழந்தையாயிற்று. இறைவியே குழந்தையாய் வந்த இத்தினம் மாசி மகம் ஆகும். ஆதி காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கொடியவனாக இருந்தான். நாட்டு மக்கள் அவனால் மிகவும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனை நாட்டின் குருவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அரசனை வெல்லும் பொருட்டு, அதற்கான உபாயத்தை கூறும் படி, ஒரு இரவு நேரத்தில் வருண தேவனிடத்தில் சென்றார், அந்த நாட்டின் குருவானவர். கானகத்தில் இருந்த வருணன் வருவது பகைவன் என்று எண்ணி, தனது பாசத்தை அவர் மீது வீசினான். உடனே குரு இறந்து போனார். அந்தக் கொலை பாவத்தால் பிசாசு வடிவம் ஒன்று அங்கு தோன்றியது. அது வருணனை இரண்டு கால்களோடு கைகளையும், கழுத்தோடு கூடும்படி கட்டி சமுத்திரத்தினுள் வீசி விட்டது. வருணன் அங்கே நெடுங்காலமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டு விடுவிப்பார் இன்றி கட்டுண்டு கிடந்தான். வருணன் இல்லாத காரணத்தால் மண்ணுலகில் மழை வளம் இல்லாமல் மக்கள் பஞ்சத்தில் தவித்து வந்தனர். இதனால் விண்ணவர்களும், மண்ணுலகத்தினரும் சேர்ந்து சிவபெருமானை நோக்கி மனமுருக வேண்டித் துதித்தனர். அவர்கள் வேதனையை உணர்ந்து கொண்ட ஈசன், பல காலமாக சமுத்திரத்தில் கட்டுண்டு கிடக்கும் வருணனின் கட்டுக்களை அறுத்தெரிந்து அவனை விடுவித்தார். வருணன் எழுந்து சிவபெருமானை வணங்கி நின்றான். பின்னர் ஈசனிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைத்தான். ‘ஐயனே! மாசி மகமாகிய இத்தினத்தில், நான் கட்டுண்டு துன்பப்பட்டு கிடந்த இந்தத் தலத்தில் இந்தத் துறையில் நீராடி இறைவனை வேண்டுபவர்களுக்கு பாசத்தை நீக்கி அவர்களுக்கு முக்தியைக் கொடுக்க வேண்டும். அன்றைய தினத்தில் ஐயனே! தாங்கள் இந்தத் துறையில் எழுந்தருளல் வேண்டும்’ என்று வேண்டி பிரார்த்தித்து வரங்களைப் பெற்றான். இந்தச் சரித்திரத்தை வியாக்கிர பாத முனிவர், இரணியவர்மச் சக்கரவர்த்திக்குக் கூறினார். அவன் மாசி மகத் தினம் வர, அன்றையப் பொழுதில் சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குக் கொடியேற்றி வைத்தான். அப்போது முனிவர்கள் முதலானவர்கள் வந்திருந்து விழாவைத் தரிசித்துக் ‘கனகசபைக்குத் தலைவரே! உங்களை எண்ணி வாழும் உயிர்கள் அனைத்துக்கும் அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பின்னர் தேவர்கள் அனைவரும் சேர்ந்து, சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தார்கள். சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளினார். வருணன் இதனைக் கண்டு ஈசனை எதிர்கொண்டு வணங்கினான். அவனுடன் சேர்ந்து மற்ற தேவர்கள் அனைவரும் சிவ பெருமானை வணங்கி வழிபட்டனர். சிவபெருமான் வருணனது பாசத்தை நீக்கியருளிய துறையிலே திருமஞ்சனமாடி அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனகசபையினுள்ளே எழுந்தருளினார். சிதம்பரத்தில் உள்ள பத்துத் தீர்த்தங்களுள் பாசமறுத்த துறையும் ஒன்று. சிதம்பரத்தில் இருந்து சுமார் 2½ கிலோ மீட்டர் தொலைவில் இந்த துறை உள்ளது. மாசி மகம் தினத்தில் விரதமிருந்து பாசமறுத்த துறையில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த தினத்தில் இறைவனை வழிபடுவதுடன் இத்துறையில் நீராடினால் பாவங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகத்தில் வரும் புண்ணிய நாள் மாமாங்கம் எனப்படும். கும்பகோணத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்

Keine Kommentare:

Kommentar veröffentlichen